| ADDED : பிப் 28, 2024 06:09 AM
மதுரை : மதுரை மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் பிரவீன் உமேஷ் டோங்கரே சிவகங்கைக்கும், அங்கிருந்த அரவிந்த் மதுரைக்கும் இடமாற்றப்பட்டனர்.லோக்சபா தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் சமீபத்தில் இடமாற்றப்பட்டனர். இதன்படி மதுரை எஸ்.பி.,யாக இருந்த சிவபிரசாத் தேனிக்கும், அங்கிருந்த பிரவீன் உமேஷ் டோங்கரே மதுரைக்கும் இடமாற்றப்பட்டனர். இவர் கடந்த மாதம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு சமயத்தில் பொறுப்பேற்றார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் தலைமையில் நடந்த கலெக்டர், கமிஷனர், எஸ்.பி.,க்கள் ஆலோசனைக்கூட்டத்தில், அதிகாரிகளை வெளிமாவட்டத்திற்கு மாற்றும்பட்சத்தில் அந்த மாவட்டத்திற்குள் ஏற்கனவே அவர் பணியாற்றிய மாவட்டத்தின் லோக்சபா தொகுதிக்குப்பட்ட சட்டசபை தொகுதிகள் வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே மதுரை எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே சிவகங்கைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் தேனி மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்தார். தேனி லோக்சபா தொகுதிக்குள் மதுரை மாவட்டத்திற்குட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி சட்டசபை தொகுதிகள் வருகின்றன. இதன் அடிப்படையிலேயே அவரை தமிழக அரசு அவரை இடமாற்றம் செய்து, அவருக்கு பதில் சிவகங்கை எஸ்.பி., அரவிந்த்தை நியமித்துள்ளது.