மஞ்சள் கொத்துகள் அறுவடைக்கு தயார்
மேலுார் : மேலுார் பகுதிகளில் பொங்கலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் கிழங்கு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.தமிழர் பண்டிகைகளில் முக்கியமான பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு பானையில் மங்கலகரமான மஞ்சள் கட்டுவது வழக்கம்.இதற்காக மஞ்சள் கிழங்கு செடிகள் வி.மலம்பட்டி சருகுவலையபட்டி, குறிச்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் செலவு செய்து பயிரிட்டுள்ள மஞ்சள் செடி தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.விவசாயி சிங்காரம் கூறியதாவது: முக்கால் கிலோ எடை கொண்ட ஒரு மஞ்சள் கொத்து ரூ.12க்கு விற்பனை செய்கிறேன். பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்படும் மஞ்சள் ஏழு மாதத்திலும், சமைப்பதற்கான மஞ்சள் ஓராண்டிலும் அறுவடை செய்கிறோம்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொத்தாக பறிக்கப்படும் மஞ்சள் கொத்துகளை, தென்னங்கீற்றில் சுற்றி ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். மஞ்சள் கொத்துகளில் மருத்துவ குணம் அதிகமாக உள்ளதால் மருந்துகள் தயாரிப்பதுடன், பொங்கல் வைக்கும் பானைகளில் கட்டுவதும் உண்டு. மேலும் உணவு மற்றும் அழகு சாதனங்களிலும் பயன்படுத்துகின்றனர். மஞ்சள் செடி பயிரிட்டதால் பணமும், மக்களுக்கு உபயோகப்படுவதால் மனமும் நிறைவாக உள்ளது என்றார்.