| ADDED : ஜன 10, 2024 11:39 PM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில், ஜன., 6 முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் கனமழை பெய்தது. வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வயலில் தேங்கியதால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கியதால், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சீர்காழி அடுத்த கதிராமங்கலம், ஆத்துகுடி, மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டை பகுதிகளில் மழையால் பாதித்த பயிர்களை பார்வையிட்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள நிலையில், கனமழை காரணமாக 18,000 ஏக்கரில் நெற்பயிரும், 1,000 ஏக்கர் வேர்க்கடலையும் மூழ்கி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அது குறித்து ஆய்வு செய்துள்ளோம். கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.மாவட்டத்தில், தொடர் மழையால் 30,000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நிலையில், அமைச்சர் 18,000 ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்ததாக கூறியதால் அதிருப்தியடைந்த விவசாயிகள், 'முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.