பள்ளிப்பாளையம் சாய ஆலைகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு
பள்ளிப்பாளையம் சாயஆலைகளில் ஆர்.டி.ஓ., ஆய்வுபள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 65 சாய ஆலைகள் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. இந்த சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் சாய ஆலைக்கே பயன்படுத்த வேண்டும். ஆனால், பல சாய ஆலைகள் விதிமுறை மீறி, சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக வெளியேற்றி வருகின்றன. அவ்வாறு வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர், ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால், காவிரி ஆற்றில் குடிநீருக்கு மட்டும் குறைந்தளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரில் சாயக்கழிவுநீர் அதிகளவு கலப்பதால், குடிநீர் முற்றிலும் மாசடைந்து காணப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து அவரது உத்தரவுப்படி, நேற்று திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பறக்கும்படை, மின் வாரியம், நீர்வளத்துறை மற்றும் போலீசார், சமயசங்கிலி, ஆவத்திபாளையம், களியனுார், வசந்த நகர், ஒட்டமெத்தை உள்ளிட்ட பகுதியில் விதிமுறை மீறி செயல்பட்டு வந்த சாய ஆலைகளில் ஆய்வு செய்தனர். அதேபோல, உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்திருந்த சாய ஆலைகளிலும், அரசு விதிமுறைப்படி கட்டமைப்பு உள்ளதா எனவும், திருச்செங்கோடுஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.