உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய கண்டுபிடிப்புக்கு "இன்ஸ்பயர் அவார்டு:மாவட்ட சி.இ.ஓ., எச்சரிக்கை

புதிய கண்டுபிடிப்புக்கு "இன்ஸ்பயர் அவார்டு:மாவட்ட சி.இ.ஓ., எச்சரிக்கை

நாமக்கல்: ''மத்திய அரசு வழங்கிய 'இன்ஸ்பயர் அவார்டு' தொகையை, புதிய கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிக்கோ, மாணவரின் சொந்த செலவுக்கோ பயன்படுத்தக்கூடாது,'' என, மாவட்ட சி.இ.ஓ., விஜயராகவன் தெரிவித்துள்ளார். அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை படிக்கும் மாணவ, மாணவியரை தேர்வு செய்து, இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில், மத்திய அரசு 'இன்ஸ்பயர் அவார்டு' என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள், தங்களது திறமைகளை பயன்படுத்தி புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கான திட்டத்தை, ஆசிரியர் துணையுடன் தயார் செய்து, அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, கடந்த ஆண்டு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, மாவட்டம் தோறும் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மாணவ, மாணவியர், தங்களது திறமையால் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் படைப்புகளை இடம்பெற செய்திருந்தனர். கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஏராளமான கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், இரண்டு பேர் என மாவட்டம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலை, அரசு உதவிபெறும் பள்ளி என மொத்தம், 218 பள்ளிகளைச் சேர்ந்த, 375 மாணவ, மாணவியருக்கு தலா, 5,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அந்த தொகையை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கான உபகரணங்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். ஆனால், 'அந்த பணத்தை வங்கியில் போட்டு கலெக்ஷன் ஆனதும் பள்ளிக்கு வழங்க வேண்டும்' என, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், 'இந்த பணம், அடுத்த ஆண்டு இளம் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் புதிய அறிவியல் படைப்புக்கு பயன்படுத்தப்படும்' என்றும் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு அரசு வழங்கிய பணத்தை, பள்ளிக்கு வழங்கும்படி பள்ளி தலைமையாசிரியர் கூறியதை கேட்ட பள்ளி மாணவ, மாணவியர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சி.இ.ஓ., விஜயராகவன் கூறியதாவது: மத்திய அரசு, இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில், 'இன்ஸ்பயர் அவார்டு' வழங்குகிறது. அதன்படி பள்ளிக்கு இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த தொகையை பெற்றோரிடமோ, பள்ளிக்கோ வழங்கக் கூடாது. அதை வைத்து பள்ளியின் அறிவியல் ஆசிரியர் உதவியுடன் புதிய கண்டுபிடிப்புக்கான உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த தொகையை முறையாக செலவழிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய, சி.இ.ஓ., தலைமையில், டி.இ.ஓ., சுற்றுச்சூழல் அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி