| ADDED : ஏப் 17, 2024 02:18 AM
சேந்தமங்கலம்:கொல்லிமலை
அடிவாரம், காரவள்ளி பகுதியில் பாக்கு மரங்களை கரையான் பாதிப்பில்
இருந்து பாதுகாக்க, விவசாயிகள் சுண்ணாம்பு கலவையை பூசி வருகின்றனர்.கொல்லிமலை
அடிவாரத்தில் உள்ள காரவள்ளி, நடுக்கோம்பை, வெண்டாங்கி, பள்ளம்பாறை
உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், 700 ஏக்கர் பரப்பளவில் பாக்கு
மரங்களை வளர்த்து வருகின்றனர். அதிக தண்ணீர், குளிர்ச்சியான வானிலை
தேவைப்படும் இந்த மரங்களுக்கு, விவசாயிகள், தினந்தோறும் தண்ணீர்
பாய்ச்சி வந்தனர்.தற்போது, இப்பகுதியில் வறட்சி காரணமாக
கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது. இதனால், பாக்கு மரங்களுக்கு
தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காப்பு தன்மை குறையும்
என்பதாலும், ஈரப்பதம் குறைந்தால் கரையான் பாதிப்பு அதிகரிக்கும்
என்பதாலும், விவசாயிகள் பாக்கு மரங்களுக்கு சுண்ணாம்பு கலவையை பூசி
வருகின்றனர்.இதுகுறித்து, நடுக்கோம்பையை சேர்ந்த விவசாயி சேகர் கூறியதாவது: கொல்லிமலை
அடிவார பகுதியில் அதிகளவில் பாக்கு மரங்களை வளர்த்து வருகிறோம்.
கொல்லிமலையில் மழை பெய்தால், தண்ணீர் காரவள்ளி வழியாக இங்குள்ள
ஆறுகளில் செல்லும். இதனால், இப்பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர்
பற்றாக்குறை இருக்காது. ஆனால், இந்தாண்டு மழை இல்லாததால்
கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும்
வகையில் கரையான் தாக்காதவாறு, பாக்கு மரங்களில் சுண்ணாம்பு கலவையை
பூசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.