குளித்தலை: குளித்தலை, அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு, கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதில் முன்னாள் ராணுவ வீரரின் பிள்ளைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வில், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது. பேராசிரியர்கள் மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, இயற்பியல் துறை தலைவர் ராமநாதன், கணித துறை தலைவர் உமாதேவி, உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் துறை தலைவர் சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பு கலந்தாய்வில் தகுதி உடைய மாணவர்களை தேர்வு செய்தனர் .இதையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன், 10ல் தொடங்கி, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 10ல் இளம் வணிகவியல், வணிக நிர்வாகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் துறை, 11ல் இளம் அறிவியல் பாடங்களான மின்னணுவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி துறை, கணிதம், கணினி பயன்பாட்டியல், 12ல் இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடக்க உள்ளது என, கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.* கரூர், அரசு கலைக் கல்லுாரியில் இளங்கலை, இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 114 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதில், 44 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது.ஜூன் 10-ல் இளங்கலை தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 12-ல் வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல், வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கும், 14- ல் இளம் அறிவியல் இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், இளம் அறிவியல் விலங்கியல், தாவரவியல், புவியியல், புவி அமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் நடக்கிறது.ஜூன், 24-ல் இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 26-ல் வணிகவியல், வணிகக் கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல், வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், 28- ல் இளம் அறிவியல் இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், கணினி அறிவியல், இளம் அறிவியல் விலங்கியல், தாவரவியல், புவியியல், புவி அமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.