நாமக்கல்:சீதோஷ்ணம் காரணமாக கோழி எடை அதிகரித்துள்ளதாலும், வடமாநிலங்களில் ஸ்ராவன் விரதம் துவங்கி உள்ளதாலும், கறிக்கோழி கொள்முதல் விலை, ஒரே நாளில், 19 ரூபாய் சரிந்துள்ளது. தமிழகத்தில், பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும், 35 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த, 1ல் கொள்முதல் விலை ஒரு கிலோ, 95 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது, தொடர்ந்து, 4ல், 98 ரூபாய், 5ல், 94 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று, 19 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ, 75 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இதுகுறித்து, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் தற்போது, சிதோஷ்ணம் மாற்றம் காரணமாக, கோழி எடை அதிகரித்துள்ளது. வழக்கமாக, 42 நாளில், 2 கிலோ எடை வரும் நிலையில், தற்போது, 38 நாளில், 2.500 கிலோ அதிகரித்துள்ளது. மேலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், ஸ்ராவன் விரதம் துவங்கி உள்ளதால், நுகர்வு சரிந்துள்ளது. அதன் காரணமாக, தமிழகத்தில், கறிக்கோழி கொள்முதல் விலை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வேறு வழியின்றி, கிலோவிற்கு, 19 ரூபாய் சரிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.