உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாசூர் ஏரி தண்ணீர் மாசடைந்துள்ளதாக புகார்

துாசூர் ஏரி தண்ணீர் மாசடைந்துள்ளதாக புகார்

எருமப்பட்டி: துாசூர் ஏரி தண்ணீர் மாசடைந்துள்ளதாக வந்த புகாரையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்து, எட்டு இடங்களில் நீர்மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.நாமக்கல் அருகே, துாசூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, கொல்லிமலையில் பெய்யும் மழை, காற்றாற்று வெள்ளமாக மாறி, பழையபாளையம் ஏரி நிரம்பி வழியும் தண்ணீர், துாசூர் ஏரிக்கு செல்லும் வகையில் நீர்வழிப்பதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரால், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் வரை, 250 ஹெக்டேர் பரப்பளவில் முப்போகம் நெல் நடவு செய்யப்பட்டது. கடந்த, மூன்று ஆண்டுக்கு முன் வரை போதிய மழை இல்லாததால் ஏரி வறண்டது. இதனால், நாமக்கல் நகராட்சி கழிவுநீரை சுத்திகரித்து, துாசூர் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்தது.இதையடுத்து, கொல்லிமலையில் பெய்த கனமழையால் ஏரிக்கு தண்ணீர் வந்த நிலையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல் நடவு செய்தனர். ஆனால், நெல் வயல்களில், ஏரி தண்ணீருடன், நகராட்சி கழிவு நீரும் கலந்ததால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது. மேலும், துாசூரை ஒட்டியுள்ள பகுதிகளில் குடிநீர் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து, கலெக்டர் உமா, சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்தார். பின், ஏரியில் கலக்கும் தண்ணீரை ஆய்வு செய்ய, மாசு காட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரகுநாதன் தலைமையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராமச்சந்திரன், ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், நேற்று நாமக்கல் நகராட்சியில் தண்ணீர் சுத்திகரிக்கும் இடத்தில் இருந்து, துாசூர் ஏரி வரை ஆய்வு செய்து, எட்டு இடங்களில் நீர்மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.இதுகுறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன் கூறுகையில், ''கலெக்டர் உத்தரவுப்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் தலை‍மையில் கொண்ட குழுவினர், நேற்று நாமக்கல் நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிக்கும் இடத்தில் இருந்து, துாசூர் வரை சென்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பச்சையாக செல்வதால் பாதிப்பு ஒன்றும் இல்லை. ஆனால், ஒரு சில நேரங்களில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர். இதை கண்டுபிடிக்கும் வகையில், எட்டு இடங்களில் நீர்மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்ததும், எந்த இடத்தில் தவறு உள்ளது என தெரியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை