ராசிபுரம்: ராசிபுரத்தில், நேற்று வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது. இதில், அப்பகுதி விவசாயிகள் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: வெண்ணந்துார், தொட்டியப்பட்டியில் சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரி நிலத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். குறிப்பாக, ஏரிக்கு செல்ல கூடிய மழைநீர் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் ஏரிக்கு செல்லும் நீர் தடைபட்டுள்ளது. மேலும், ஏரிக்கு செல்ல வேண்டிய மழைநீர், ஏரிக்கு செல்ல முடியாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும், ஊர் பகுதியில் இருந்து ஏரிக்கரைக்கு செல்லும் பாதையை தனி நபர்கள், மரங்களை வெட்டி நடுவே போட்டு மறைத்து வைத்துள்ளனர். இதனால் ஏரிக்கரைக்கு செல்லும் பாதையை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குழாய் உடைந்து குடிநீர் வீண்
கண்டுகொள்ளாத டவுன் பஞ்.,
ப.வேலுார்: பாண்டமங்கலம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. ஆனால், டவுன் பஞ்., நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ப.வேலுாரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் பிரதான சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே குடிநீர் இணைப்பு உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு தெரிவித்தும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து டவுன் பஞ்., நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், அதற்குரிய உதிரிபாகங்கள் இன்னும் வரவில்லை என, தெரிவித்து அலட்சியமாக விட்டனர். இதனால் ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. உடனடியாக குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.