| ADDED : ஏப் 13, 2024 11:00 AM
வெண்ணந்துார்: ''நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பிரச்னையை தீர்ப்பேன்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி உறுதியளித்தார்.நாமக்கல் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ராஹா தமிழ்மணி, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நடனமாடி ஓட்டு சேகரிப்பது, வேளாண் நிலங்களில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது என, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பானியை பின்பற்றி பிரசாரம் செய்து வருகிறார். வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்கரைப்பட்டி, தொட்டியப்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் சரோஜா, நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அக்கரைப்பட்டி பகுதியில் வேட்பாளர் தமிழ்மணிக்கு மலர் துாவி, ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். தொடர்ந்து தமிழ்மணி பேசியதாவது: படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ள நிலையில், இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளுக்கு படிக்க மையம் அமைக்கப்படும். லோக்சபா தேர்தலில் நான் வெற்றி பெற்றால், என் சொந்த செலவில் போர்வெல் வாகனம் வாங்கி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பேன்.இவ்வாறு அவர் கூறினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜா, தாமோதரன், நிர்வாகி பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.