நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 26 டன் காய்கறி, 10.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தை இருப்பதால், நாமக்கல் நகர் மக்கள் அனைவருக்கும் இந்த சந்தை பயனுள்ளதாக உள்ளது. தினமும் காலை, 5:00 மணி முதல், 10:00 மணி வரை சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களில் அறுவடை செய்யும் காய், பழம், பூ உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.விடுமுறை, விரத தினங்கள், புரட்டாசி மாதம், முகூர்த்த தினங்களில் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விவசாயிகளும் அதிகளவு வந்து தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து செல்கின்றனர். மேற்கண்ட தினங்களில் விற்பனை தொடங்கிய, சில மணி நேரங்களிலேயே அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்து விடும். நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த தினம் என்பதால் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. 148 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 21,115 கிலோ காய்கறி, 4,580 கிலோ பழங்கள், 30 கிலோ பூக்கள் என மொத்தம், 26,075 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மொத்த மதிப்பு, 10,89,710 ரூபாய் ஆகும். 5,240 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.தக்காளி, 50, புடலை, 40, பீர்க்கன்காய், 60, பாகற்காய் 70, சுரைக்காய், 20, பூசணி, 30, சின்ன வெங்காயம், 52, பெரிய வெங்காயம், 46 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், 35க்கு விற்பனையான பெரிய வெங்காயம் நேற்று கிலோவுக்கு, 11 ரூபாய் உயர்ந்து, 46க்கு விற்பனையானது.