கொல்லிமலை: கொல்லிமலையில், 10 நாட்கள் நடந்த கோடைகால கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும், நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில், 10 நாட்கள் கோடைகால கலை பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதில், யோகா, கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் கைவினை பொருட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான கோடைகால கலை பயிற்சி முகாம், கடந்த, 1ல் துவங்கி, 10ல் முடிந்தது.இந்நிலையில், ஜவகர் சிறுவர் மன்றம் விரிவாக்க மையம் சார்பில், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 6 முதல், நேற்று வரை, கோடைகால கலைப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமில், தற்காப்புக்கலை, ஓவியம், கிராமிய நடனம், பரதநாட்டியம் போன்ற நுண்கலைகளில் பயற்சி அளிக்கப்பட்டது. அதில், மலைவாழ் மாணவ, மாணவியர், 45 பேர் பங்கேற்றனர்.முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மைய திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.பரதநாட்டிய ஆசிரியை ஸ்ரீமதி, தற்காப்புக்கலை ஆசிரியர் சரவணன், கிராமிய நடன ஆசிரியர் வினோத், ஓவிய ஆசிரியர் விஜயகுமார், கிராமிய நடன ஆசிரியர் பாண்டியராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.