வட்டார அளவில் கலைத்திருவிழா 100 மாணவ, மாணவியர் அசத்தல்
ப.வேலுார்: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,- மாணவியரிடம், இயல், இசை, நாடகம், கைவினை கலைகள் ஆகிய திறன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.அதன்படி, ப.வேலுார் தாலுகா, கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி நடந்தது. அதில், ஒன்றியத்துக்குட்பட்ட, 24 நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்கள், ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் சுதை வேலைப்பாடு, மணல் சிற்பம், செவ்வியல் இசை, நாட்டுப்புற பாடல், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், பரதநாட்டியம், தனிநபர் நடிப்பு, நகைச்சுவை வழங்குதல், பல குரல் பேச்சு உள்ளிட்ட போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.வட்டார அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியர், மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியர்கள் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.