நாமக்கல் : பிளஸ் 2 பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டம், 96.10 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 10ம் இடம் பிடித்துள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியானது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, தேர்வு முடிவுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 197 பள்ளிகளை சேர்ந்த, 8,413 மாணவர்கள், 8,847 மாணவியர் என, மொத்தம், 17,260 பேர் தேர்வு எழுதினர். அதில், 7,989 மாணவர்கள், 8,597 மாணவியர் என, மொத்தம், 16,586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி, 94.96 சதவீதம். மாணவியரின் தேர்ச்சி, 97.17 சதவீதம். மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 96.10. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில், நாமக்கல் மாவட்டம், மாநில அளவில், 10ம் இடம் பெற்றுள்ளது. 2023ல் நாமக்கல் மாவட்டம், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 96.94 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 9ம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், புவியியல், நர்சிங், மனையியல் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்தில், 100 சதவீதம் மாணவ மாணவியரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், 96.76 சதவீதம், உயிரியல் பாடத்தில், 99.67 சதவீதம், விலங்கியல் பாடத்தில், 99.50 சதவீதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில், 99.31 சதவீதம்.வேதியியல் பாடத்தில், 99.21 சதவீதம், வரலாறு பாடத்தில், 99.09 சதவீதம், மொழி பாடங்களில், 99.05 சதவீதம், ஆங்கிலத்தில், 98.90 சதவீதம், கணக்கில், 98.67 சதவீதம், தாவரவியல் பாடத்தில், 98.60 சதவீதம், வணிகவியலில், 98.57 சதவீதம், இயற்பியல் பாடத்தில், 98.48 சதவீதம், பொருளியல் பாடத்தில், 98.12 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, 'சென்டம்' பெற்றுள்ள பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.