| ADDED : மே 12, 2024 12:44 PM
நாமக்கல்: வெண்ணந்துாரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குமார், 24. கடந்த மார்ச், 16ல் அடிதடி வழக்கில் குமாரை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த, 1ல் ஜாமினில் வெளியே வந்த குமார் மற்றும் இவரது அக்காள் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து, அப்பகுதியை சேர்ந்த, 2 பேரை கத்தியை காட்டி மிரட்டியதாக போலீசாருக்கு புகார் வந்தது.இதையடுத்து, விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சுகவனம், குமாரின் டூவீலரை பறிமுதல் செய்து மிரட்டியதாக மன உளைச்சலில் இருந்த குமார், இரண்டு நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் வெளியில் தங்கி உள்ளார். இதற்கிடையே, நேற்று காலை, 8:00 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க குமார் வந்தார்.அப்போது, கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மொபைல் போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனர்.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள், குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மொபைல் போன் டவரில் இருந்து கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.