| ADDED : மார் 20, 2024 02:03 AM
நாமக்கல்:லோக்சபா
தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல்
பொறுப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல்
அலுவலர் உமா தலைமை வகித்தார்.அவர் கூட்டத்தில் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க,
தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ள, 29 பொறுப்பு அலுவலர்களுடன்
பணியாற்றும் வகையில், 32 உதவி பொறுப்பு அலுவலர்கள் என, மொத்தம், 61
அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒருங்கிணைப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் தொடர்பான பணிகளை
திட்டமிடுதல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மேலாண்மை,
தேர்தல் தொடர்பான புகார்களை கையாளும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டு
எண்ணிக்கை மையம், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மற்றும்
ஓட்டுச்சாவடிகள். பறக்கு படை குழுக்கள், பதற்றமான
ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடு
செய்தல், உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு
ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டன. வாக்காளர் யாருக்கு
ஓட்டுபோட்டார் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் (விவிபேட்)
பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும்
மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்பட்டு, தேர்தலை
சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ.,
சுமன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.