டூ - வீலர் மீது பஸ் மோதல்; கல்லுாரி மாணவர் 2 பேர் பலி
எலச்சிபாளையம் : நாமக்கல் மாவட்டம், மலைவேப்பங்குட்டையைச் சேர்ந்த லோகநாதன் மகன் பூந்தமிழன், 20. இவர், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு இன்ஜி., கல்லுாரியில் ஐ.டி., முதலாமாண்டு படித்தார். இவரது நண்பர், ராசிபுரம் அருகே, புதுப்பாளையத்தைச் சேர்ந்த ரவிகுமார் மகன் ராகுல், 20, ராசிபுரம் அரசு கலைக் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் முதலாமாண்டு படித்தார்.நேற்று காலை 'யமஹா எம்.டி.,' டூ - வீலரில் கல்லுாரிக்கு புறப்பட்ட ராகுல், நண்பர் பூந்தமிழனையும் அழைத்துச் சென்றார். காலை 9:15 மணிக்கு எலச்சிபாளையம் அருகே சென்றபோது, திருச்செங்கோடில் இருந்து ராசிபுரம் நோக்கி, எதிரே வந்த எஸ்.வி.எஸ்., என்ற தனியார் நிறுவன பஸ், டூ - வீலர் மீது நேருக்கு நேர் மோதியது. ராகுல், பூந்தமிழன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடைப்பாடி பஸ் டிரைவர் ராஜமாணிக்கம், 37, என்பவரை, எலச்சிபாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.