நாமக்கல், விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, எலச்சிப்பாளையம் எஸ்.எஸ்.ஐ., மீது, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம், கொண்டாங்கியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர், நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி பகுதியில் விவசாய தோட்டத்தில் தங்கி, கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆக., 3ல், சோழசிராமணியில் இருந்து பைக்கில், மனைவி சத்யாவுடன் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். எலச்சிபாளையம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அய்யப்பன், அவரது மனைவி சத்யா ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, எலச்சிப்பாளையம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., நடராஜன், 54, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அப்போது, அவர் அய்யப்பனை, மொபைல் போனில் தொடர்புகொண்டு, விபத்தில் சிக்கிய பைக்கை ஆய்வுக்கு அனுப்ப, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, அய்யப்பன், உறவினர் ஒருவர், 'ஜிபே' கணக்கில் இருந்து, எஸ்.எஸ்.ஐ., நடராஜனுக்கு, 1,500 ரூபாய் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, விபத்து வழக்கில் நிவாரணம் பெற நீதிமன்றத்தில் வழக்கு தொடர வசதியாக, அய்யப்பன் தன் வக்கீல் மூலம் எஸ்.எஸ்.ஐ., நடராஜனை மீண்டும் அணுகினார்.அப்போது, ஆவணங்களை கொடுக்க, எஸ்.எஸ்.ஐ., நடராஜன், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. மேலும், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத அய்யப்பன், இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் அளித்த புகார்படி, எஸ்.எஸ்.ஐ., நடராஜன் மீது, கடந்த, 14ல் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.