சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், காரவள்ளி, நடுக்கோம்பை, பள்ளம்பாறை, முத்துகாபட்டி, பேளுக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலத்தில், மா மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். மாங்காயின் உற்பத்தியை பெருக்க, மரங்களில் மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இப்பகுதியில் கிளிமூக்கு, இமா வசந்த், பங்கனஹள்ளி, மல்கோவா, அல்போன்சா, செந்துாரா, காளபாடி, கோத்தாபூரி, கள்ளாமணி, சேலம் குண்டு உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் மா மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், மா மரத்தில் பூக்கள் பூக்க தொடங்குவதால் பூக்கள் உதிராமல் இருக்கவும், மாங்காய் உற்பத்தியை பெருக்கவும் மா மரத்திற்கு மருந்து அடிப்பது வழக்கம். மேலும், பச்சை நிற புழுக்களின் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் விவசாயிகள் தேன், கராத்தா வகையான மருந்துகளை மா மரத்தில் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.