நாமக்கல், : 'எருமப்பட்டி-பொன்னேரி சாலையில் அமைய உள்ள டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்' என, அப்பகுதி கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எருமப்பட்டி, பொன்னேரி கிராமத்தில், 700 குடும்பம், காளிசெட்டிப்பட்டிபுதுாரில், 300 குடும்பம், காளிசெட்டிப்பட்டியில், 700 குடும்பம் என, 1,700 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அத்தியாவசிய தேவைகளுக்கு, எருமப்பட்டி வந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும், மருத்துவமனை, வங்கி, அலுவலகம், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள், வயதானவர்கள், வாரச்சந்தை, கோவில், பஸ் போக்குவரத்து என, அனைத்து வகையிலும், எருமப்பட்டி-பொன்னேரி சாலையை பயன்படுத்தி வருகிறோம். இந்த சாலையில், டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனால், பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. பல்வேறு தரப்பினரின் நிலையை கருத்தில் கொண்டு, புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை, வேறு பகுதிக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.