பள்ளிப்பாளையம் : ''பள்ளிப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் பிற துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பதில்லை,'' என, அ.தி.மு.க., கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலக மன்ற அரங்கில், நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில், நேற்று நகர்மன்ற கூட்டம் நடந்தது. இதில், நகராட்சி கமிஷனர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், அ.தி.மு.க., கவுன்சிலர் செந்தில் பேசியதாவது: நகர்மன்ற கூட்டத்தில் பிற துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்பதில்லை. நகர்மன்ற கூட்டத்தில், சாயக்கழிவுநீர், மின்சாரம், சாலை, ஆகாயத்தாமரை, நிலம் ஆக்கிரமிப்பு, உணவின் தரம், குடியிருப்பு பகுதியில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் குறித்து புகார் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என, பதிலளிக்கின்றனர். ஆனால், பிரச்னை தீர்ந்தபாடில்லை. பிற துறையை சேர்ந்த அதிகாரிகள் நகர்மன்ற கூட்டத்தில் யாரும் பங்கேற்பதில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் பங்கேற்றால், கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.