இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை பெருக்கெடுத்த வெள்ளத்தால் மக்கள் அவதி
நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், அதிகபட்சமாக குமாரபாளையம் பகுதியில், 19 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு மி.மீ., வருமாறு:குமாரபாளையம்,- 19, கொல்லிமலை,- 15, மோகனுார்,- 10, எருமப்பட்டி, -5, நாமக்கல், -3, திருச்செங்கோடு, -2, சேந்தமங்கலம்-, 1 என, மாவட்டத்தின் மொத்த மழையளவு, 55 மி.மீ.,நாமக்கல் மாநகரில், நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை, 5:30 மணி அளவில் திடீரென மழை கொட்ட தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் நாமக்கல்-பரமத்தி சாலை சந்திப்பு, சேலம் சாலை கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக ஓட்டி சென்றனர். இந்த மழை காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.* சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதியில், நேற்று மாலை, 5:00 மணி முதல் பலத்த காற்று வீச தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. * ராசிபுரம் பகுதியில் காலை முதல் வெயில் அதிகம் இருந்தது. மாலையில் வெயில் குறைந்து, வானம் இருண்டது. இரவு, 7:30 மணிக்கு காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. 2 மணிநேரம் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.