குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் அவதி
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில், வெண்ணந்துார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 5-வது வார்டு காட்டுவளவு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: நாங்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். ஆனால், பஞ்., நிர்வாகம் மழைநீர் வடிகால் வசதி அமைத்து கொடுக்கவில்லை.பல்வேறு அலுவலகங்களில் புகார் மனு அளித்தும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறிய அளவு மழை பெய்தால் கூட, இந்த அவலம் தொடர்கிறது. தேங்கியுள்ள நீரில் விஷ ஜந்துக்கள் உள்ளன. மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் வெண்ணந்துார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 5-வது வார்டு காட்டுவளவு பகுதியில் மழைநீர் வெளியேற முறையாக வடிகால் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.