ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் கொல்லிமலை வாழ் மக்கள் சிரமம்
சேந்தமங்கலம்: கொல்லிமலை டவுன் பஞ்.,ல் உள்ள தார்ச்சாலைகள், ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக இருப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சோளக்காடு பகுதியில் இருந்து அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை, பல ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது. இதை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது பெய்த மழையால், தார்ச்சாலையில் இருந்த ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காணப்படுகிறது. மழைக்காலத்தில், சாலை எது? பள்ளம் எதுவென தெரியதா அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது, கொல்லிமலை புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. மேலும், அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தார்ச்சாலை கரடுமுரடாக இருப்பதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அந்த சாலையை கடப்பதற்குள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்