நாமக்கல்: 'வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நாமக்கல் தொகுதியில் போட்டியிட வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல் லோக்சபா தொகுதி, பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாநில துணைத்தலைவர் துரைசாமி, லோக்சபா தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில், நாமக்கல் தொகுதியில், மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதையடுத்து, மாநில துணைத்தலைவர் துரைசாமி கூறியதாவது: கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி இந்தியாவை காப்பாற்ற, 'பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும்' என்றார். அதே பிரதமர், தற்போது இந்தியாவை உலக அளவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற, பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட வேண்டும் என கேட்கிறார். கடந்த, 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது. 'நோட்டா' கட்சி என, பா.ஜ.,வை கிண்டல் செய்தவர்கள், தற்போது அதன் வளர்ச்சியை பார்த்து பயந்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நாமக்கல் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுள்ளோம். அப்படி அவர் போட்டியிட்டால், 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.அதேபோல், 2026 சட்டசபை தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மை பெற்று, அண்ணாமலை முதல்வராக பதவியேற்பதை யாராலும் தடுக்க முடியாது. பா.ஜ.,வை விட்டு விலகி சென்றவர்கள், மீண்டும் நமது கூட்டணிக்கு வருவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் நகர தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.