புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியல்
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் புறவழிச்சாலை அருகே உள்ள பனங்காடு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட ஆத்துார் - திருச்செங்கோடு புறவழிச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியில் வேகத்தடை அமைத்து தரக்கோரி கடந்த ஓராண்டாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், வேகத்தடை அமைத்து கொடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்தவர்கள் டூவீலரில் சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதியது.இதில், படுகாயமடைந்த இருவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், வேகத்தடை அமைத்து தரக்கோரியும், புறவழிச்சாலையில் விளக்குகள் அமைத்து தரக்கோரியும், மரக்கிளைகளை சாலை நடுவே போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.