திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., ஆபீசில் ரெய்டு ரூ.1.42 லட்சம் பறிமுதல்; 3 பேர் மீது வழக்கு
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., ஆபீசில் 'ரெய்டு'ரூ.1.42 லட்சம் பறிமுதல்; 3 பேர் மீது வழக்குதிருச்செங்கோடு, நவ. 27-திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 1.42 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர், போட்டோகிராபர் உள்பட, 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.திருச்செங்கோட்டில், ஈரோடு சாலை, வரகூராம்பட்டியில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்களுக்கு எல்.எல்.ஆர்., லைசென்ஸ் புதுப்பித்தல், புது லைசென்ஸ் விண்ணப்பித்தல் பணிகள் நடக்கின்றன. இதற்காக லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவல்படி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையில், 8 பேர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) சரவணனிடமிருந்து, 10,400 ரூபாய், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாமாபிரியாவிடம், 9,450 ரூபாய், 'எல்காட்' போட்டோகிராபர் பஷீர் அகமதுவிடம், 71,150 ரூபாய், புரோக்கர்கள், சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் இருந்து, 61,900 ரூபாய் என, ஒரு லட்சத்து, 42,500 ரூபாய், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால், நேற்றும் அலுவலகம் செயல்படவில்லை.