நாமக்கல், ''மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அரும்பணி ஆற்றிவரும் கலெக்டரை முன்னுதாரணமாக கொண்டு, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண்களுக்கு கற்பிப்போம்' என்ற உலக மகளிர் தின விழா, நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில் கொண்டாடப்பட்டது.கலெக்டர் உமா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு வரவேற்றார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திட்டத்தை கொண்டு வந்தார். அவரது வழியில் செயல்படும் முதல்வர் ஸ்டாலின், பெண்களின் முன்னேற்றத்திற்காக, உள்ளாட்சி அமைப்புகளில், 50 சதவீதம் ஒதுக்கீடு, அரசு வேலைகளில், 33 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி செயல்படுத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், சேந்தமங்கலம், எருமப்பட்டிக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 358 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை, 24,000 பேருக்கு, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அரும்பணி ஆற்றிவரும் கலெக்டரை முன்னுதாரணமாக கொண்டு, நீங்களும் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, இந்த சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, மாணவியருக்கு மகளிர் தின வாழ்த்து மடல், திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம், இலவச தையல் இயந்திரம், சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) மோகனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், பேராசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.