| ADDED : ஜூன் 02, 2024 07:35 AM
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான (பொறுப்பு) முனுசாமி உத்தரவுப்படி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் வழிகாட்டுதல் படி, நாமக்கல் நகர்புற சுற்றத்தில், திடக்கழிவு மேலாண் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கமிஷனர் சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தார். துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வக்கீல் பழனிச்சாமி, இளநிலை நிர்வாக அலுவலர் இளையபாரதி, அலுவலக உதவியாளர்கள் மகேந்திரன், உதயநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திட கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என எவ்வாறு பிரிப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, உரிய இடத்திலேயே குப்பை கொட்டுவது குறித்து விளக்கப்பட்டது.மேலும், திடக்கழிவு மூலம் பொது இடங்களை அசுத்தம் செய்வதை தடுப்பது பற்றியும், சட்ட விழிப்புணர்வும் பதாகைகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வீடு வீடாக சென்று மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 'நாட்டில் அனைத்து நிர்வாகங்களும், சரியாக செயல்பட்டாலும் பொது மக்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும். அப்போது தான் அனைத்து திட்டங்களும் நாட்டில் நிறைவேறும்' என, நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.