எர்ணாபுரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
நாமக்கல்: எர்ணாபுரத்தில் நடந்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி ஆய்வு செய்தார்.நாமக்கல் மாவட்டத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்னும் திட்டத்தின் கீழ், உயர் மருத்துவ சேவை முகாம்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும், 3 வீதம், 15 வட்டாரங்களில், 45 முகாம்கள், ஒரு மாநகராட்சிக்கு, 3 என, மொத்தம், 48 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.சிறப்பு மருத்துவ வசதி குறைந்த ஊரக பகுதிகள், மருத்துவ வசதி குறைவாக உள்ள நகர்ப்புற பகுதிகளை தேர்ந்தெடுத்து, வாரந்தோறும் சனிக்கிழமை, தகுந்த நாட்களில், காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை பள்ளிக்கல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் முகாம்கள் நடத்தப்படுகிறது.அதன்படி, நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதயநோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காக கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாம்களில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இதர ரத்த பரிசோதனை, மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, காச நோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள் உள்பட, 17 துறைகளை சேர்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. தேவைப்படும் நோயாளிகளுக்கு, தலைமை மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.முகாமை, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிகிச்சைகள், மருந்துகள், பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். ஆர்.டி.ஓ., சாந்தி, மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.