| ADDED : நவ 28, 2025 01:54 AM
குமாரபாளையம்,குமாரபாளையம் அருகே, கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, சத்யா நகர் செல்லும் வழியில், சேதமான சாலையை புதிய தார்ச்சாலையாக மாற்ற வேண்டி, பழைய சாலையை பொக்லைன் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது. பல மாதங்களாகியும் இதுவரை சாலை அமைக்கும் பணிக்கான எந்த வேலையும் நடக்க வில்லை. சத்யா நகர் பொதுமக்கள், மினி பஸ்சில் குமாரபாளையத்துக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தனர். வெட்டப்பட்ட சாலை வழியாகத்தான் மினி பஸ் சென்று வருவது வழக்கம்.தற்போது சாலை வெட்டி போடப்பட்டதால், மினி பஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேல் வளவு, சத்யா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் துணி துவைக்கவும், குளிக்கவும் இந்த சாலை வழியாக தான் செல்வது வழக்கம். சாலை வெட்டப்பட்டதால், வாய்க்காலுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, தாமதம் செய்யாமல் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.