ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த போதமலையில் சாலை அமைக்கும் பணிக்கு, முன்னேற்பாடாக பொக்லைன் இயந்திரம் மூலம் மலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.வெண்ணந்துார் பஞ்.,க்குட்பட்ட கீழுர் ஊராட்சியில், போதமலை மலை கிராமம் உள்ளது. இங்கு, கீழூர், மேலுார், கெடமலை என, 3 குக்கிராமங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்தது முதல், 75 ஆண்டுகளாக இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதியில்லை. மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியான இங்கு, 2,000 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இந்த மலைப்பகுதியில் ஆரம்ப பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், சாலை வசதி இல்லாததால், மக்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அதனால், இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக சாலைவசதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையேற்று, நபார்டு கடன் திட்டமான, ஆர்.ஐ.டி.எப்., நிதி, 112 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்களிப்பாக, 28 கோடியும் என, மொத்தம், 140 கோடி ரூபாயில் போதமலைக்கு சாலை அமைக்க ஒதுக்கப்பட்டது. போதமலைக்கு, வடுகம் முதல் கீழூர் வழியே மேலுார் வரையிலும், புதுப்பட்டி முதல் கெடமலை வரையிலும், 31 கி.மீ., தொலைவிற்கு புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதல் கட்ட டெண்டர் விடப்பட்டு, சாலை அமைக்கும் பகுதியை சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.