நாமக்கல், இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என, நாமக்கல்லில் நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., உமா பேசினார்.நாமக்கல்லில், நேற்று சேலம் சரக டி.ஐ.ஜி., உமா, தலைமையில், போதை எதிர்ப்பு குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில், டி.ஐ.ஜி., உமா பேசியதாவது:போதை எதிர்ப்பு குழு பள்ளி, கல்லுாரிகளில் அமைக்கப்பட்டு அதன் உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது. சமூக வலைதளங்களில், எவ்வித கவன சிதறலுக்கும் மாணவர்கள் சிக்காமல் நல்ல முறையில் பயில வேண்டும். போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது. போதை பொருட்கள் மன அழுத்தத்தை தரக்கூடியது. வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைந்திடும்.போதை பொருள் பழக்கத்திற்கு உள்ளான உறவினர்கள், நண்பர்கள் குறித்த தகவல்களை உடனடியாக பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், போதை ஒழிப்பு உறுப்பினர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி பருவம் என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம். போதை பழக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தடுப்பதன் மூலம் அடுத்தடுத்த குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுத்திட முடியும்.போதை பொருட்கள் பயன்பாடு குறித்த தகவல் தெரிந்தால், ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். உங்களை நல்வழிப்படுத்தவே, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. போதை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்.இவ்வாறு பேசினார்.முன்னதாக போதை ஒழிப்பு உறுதிமொழியை பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், போலீசார் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் போதை ஒழிப்பு குறித்து கலந்துரையாடினர். சி.இ.ஓ., மகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் புகழேந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.