நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:* சுரேஷ், விவசாயி: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், சீராப்பள்ளி டவுன் பஞ்., தேவஸ்தானம்புதுார் தொடக்கப்பள்ளியில், மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால், அங்கு படிக்கும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். தண்ணீர் தேங்காமல் இருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.* துரைசாமி, விவசாயி: நாமக்கல் மாவட்டம், போதமலை அடிவாரம் பெரும்பாலி ஆற்றில் இருந்து பட்டணம் ஆலந்துார் ஏரி வழியாக வெளியேறும் உபரி நீர், பட்டணம் முனியப்பம்பாளையம் குட்டையை அடைகிறது. ஆனால், வழித்தடம் ஆக்கிரமிப்பு காரணமாக, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து, விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.* பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்: நாமக்கல் மாவட்டத்தில், 2013 முதல், இலவச மின் இணைப்பு கேட்டு, 15,000 விவசாயிகள் காத்திருக்கின்றனர். அதனால், உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.