குமாரபாளையம்: மத்திய அரசின், 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம், சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்கவும், குலத்தொழிலை வளர்க்கவும் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் கிராம பகுதிகளிலும் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில், பா.ஜ.,வினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.அதன்படி, குமாரபாளையம் அருகே, குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., நகரில், 'விஸ்வகர்மா யோஜனா' திட்ட துவக்க விழா, நேற்று நடந்தது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த, எம்.பி., ரபிலா பின் போரா, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:குஜராத் மாநிலத்தின் கடைக்கோடி பகுதியான, சாந்தி நகர் பகுதியில் இருந்து நான் வந்துள்ளேன். 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம் ஒரு சிறந்த திட்டம். இது சாதாரண மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும். இந்த திட்டத்தில், தமிழகத்தில், 86 லட்சம் மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. இதில், 32 லட்சம் மனுக்களுக்கு மாவட்ட நிர்வாக மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர் சிவகாமி பரமசிவம், மாவட்ட பொது செயலாளர் சரவணராஜன், மாவட்ட விளையாட்டு திறம் மேம்பாட்டு பிரிவு தலைவர் நாகராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் தங்கவேல், மாவட்ட துணை தலைவர் கனகராஜ், நகர தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.