| ADDED : பிப் 04, 2024 10:43 AM
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் வரும், 20ம் தேதி ராஜாவாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்யப்படும் என, பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர்.ராஜா வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக, தண்ணீர் நிறுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமையில் நேற்று நடந்தது. உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராஜா, கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனுார் வாய்க்கால் பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.வாய்க்கால் கரைகளில் உள்ள தென்னை மரங்களை அகற்ற வேண்டும். துார்வாரும் மண்ணை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். புதிதாக அமையும் தடுப்பணையில், மோகனுார் ராஜா வாய்க்காலுக்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும். வாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். பராமரிப்பு பணிக்காக 15 நாட்களுக்கு மட்டும் ராஜா, கொமராபாளையம் மற்றும் மோகனுார் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் பேசினர்.செயற்பொறியாளர் ஆனந்தன், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிப்., 20 முதல் 15 நாட்கள் மட்டும் பராமரிப்பு பணிக்காக ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்படும். மார்ச், 7-ம் தேதி விவசாய பணிக்காக மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்றார்.உதவி பொறியாளர் சுரேகா உட்பட பொதுப்பணித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ நெடுஞ்செழியன், ப.வேலுார் ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலர் பெரியசாமி, கவுரவ தலைவர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.