பாலக்காடு;பாலக்காடு அருகே, ஆற்றில் குளிக்க இறங்கிய மூன்று மாணவர்கள், நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், செர்ப்புளச்சேரி குற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த முஸ்தபா- - ராபிய தம்பதியரின் மகள் ரிஸ்வானா, 17, பிளஸ் 1 மாணவி. மண்ணார்க்காடு கெடுவாரக்குண்டு பகுதியைச் சேர்ந்த அபுபக்கர்- - சுஹ்ரா தம்பதியரின் மகள் தீனா மெஹ்பா, 20, தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கணிதம் மூன்றாம் ஆண்டு மாணவி.கொடுவாளிப்புரம் சம்சுதீன்- - நபீசா தம்பதியரின் மகன் பாதுஷா, 20, பட்டப் படிப்பு மாணவன். இவர்கள் அம்மாக்கள் சகோதரிகள்.இந்நிலையில், கோடை விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட காராகுறுச்சியில் உள்ள, பாட்டி வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்தனர்.மத்திய உணவு சாப்பிட்ட பின், மாலை, 5:30 மணியளவில் இவர்கள் மூவரும், அப்பகுதியில் சம்சுதீன் பணியாற்றும் தோட்டத்தை பார்க்க சென்றனர்.தோட்டத்தின் அருகில், செல்லும் ஆற்றில் குளிக்க இறங்கியபோது, மூவரும் தாழ்வான பகுதியில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதை கண்ட அப்பகுதி மக்கள், மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால், ரிஸ்வான மருத்துவமனையில் அனுமதித்தவுடன் இறந்தார். தீனா மெஹ்பா இரவு, 9:00 மணிக்கும், பாதுஷா இரவு, 10:30 மணிக்கும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.மண்ணார்க்காடு போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.