| ADDED : ஏப் 04, 2024 10:54 PM
கூடலுார்;கூடலுார், ஸ்ரீமதுரைஊராட்சி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. முதுமலையிலிருந்து இரவில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்புக்குள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இவற்றால் மக்களும், வளர்ப்பு கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், அவர்கள் வருவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று, காலை கிச்சலூர் - சேமுண்டி சாலையை கரடி கடந்து சென்றுள்ளது. அதனை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினர். கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.தகவல் அறிந்த வன ஊழியர்கள், அப்பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது பலாப்பழம், தேன் சீசன் துவங்கி உள்ளதால், அதனை சுவைப்பதற்காக கரடி வந்திருக்க வாய்ப்புள்ளது. வன ஊழியர்கள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும், மரங்களில் இருந்து பலா காய்களை அகற்றுவதுடன், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,' என்றனர்.