உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாஸ்டர் மாதன் மறைவுக்கு பா.ஜ., தலைவர்கள் அஞ்சலி

மாஸ்டர் மாதன் மறைவுக்கு பா.ஜ., தலைவர்கள் அஞ்சலி

பெ.நா.பாளையம்;நீலகிரி லோக்சபா தொகுதியில், இருமுறை எம்.பி., யாக பதவி வகித்தவர் மாஸ்டர் மாதன். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி அருகே, பாலாஜி கார்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். உடல் நலம் பாதித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருடைய உடலுக்கு, ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, த.மா.கா., தலைவர் வாசன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக அமைச்சர் ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் உள்ளிட்ட பலர், மலர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின் அவரது உடல், நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையம் நித்தியானந்தா மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தலைவர்கள் இரங்கல்

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: சமூக முன்னேற்றத்திற்கும், பிற்படுத்தபட்டோரின் மேம்பாட்டிற்காகவும் தன் வாழ்வை முழுதுமாக அர்ப்பணித்தவர். தமிழகத்தில் கட்சியின் அடிப்படை மற்றும் சித்தாந்தங்களை வலுப்படுத்த, அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: நீலகிரி தொகுதியில் பா.ஜ., சார்பில் ஐந்து முறை போட்டியிட்டு, இரு முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிக்கும் நீலகிரி மக்கள் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர். நீலகிரி தேயிலை தோட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டவர். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அன்பை பெற்றவர். அவரது மறைவு, தமிழக பா.ஜ.,வுக்கு பேரிழப்பு.மத்திய அமைச்சர் முருகன்: தேசிய வழியில் பயணித்து, எண்ணற்ற இளைஞர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் அரசியல் வழிகாட்டியாக வாழ்ந்தவர். தனது சமூக சேவைகளின் வாயிலாக என்றும் நம்மோடு நிலைத்திருப்பார். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்