| ADDED : ஜூன் 12, 2024 09:47 PM
ஊட்டி- ரேஷன் கடைகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் நடைமுறைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.நீலகிரியில், பொதுவினியோக திட்டத்தின் கீழ், 321 முழுநேர நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளில் முழு நேர கணினி மயமாக்கல் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, 90 முழுநேர நியாயவிலை கடைகளுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரம் மற்றும் 'ஐ.ஆர்.ஐ.எஸ்., ஸ்கேனர்' வழங்கப்பட்டு, கணினி மயமாக்கல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.மீதமுள்ள, 231 முழுநேர நியாயவிலை கடைகளுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரம் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ்., ஸ்கேனர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் கடைகளில் உள்ள பழைய விற்பனை முனைய இயந்திரத்தை உடனடியாக சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன் பின், பழைய விற்பனை முனைய இயந்திரத்தில் உள்ள தரவுகள் புதிய விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இதில், கைரேகை பதிவு செய்ய இயலாத குடும்ப அட்டைதாரர்களுடைய கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன் கூறுகையில்,''புதிய விற்பனை முனைய இயந்திர பணி, 12ல் துவக்கப்பட்டுள்ளது. 13, 14ம் தேதி வரை, 231 முழு நேர ரேஷன் கடைகள் இயங்காது. பொதுமக்கள் அந்த நாட்களை தவிர்த்து இதர நாட்களில் வழக்கம் போல் பொது வினியோக திட்டத்தின் கீழ், அத்தியாவசிய பொருட்களை பெற்றுகொள்ளலாம்,'' என்றார்.