பேரிடர் ஒத்திகை: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஊட்டி;ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கன மழை பெய்தது. மழைக்கு, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில் மண்சரிவு, மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட முழுவதும், 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமானது. இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆங்காங்கே முகா மிட்டு பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று, ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் பேரிடர் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். அதில், 'பலத்த காற்று மற்றும் கனமழை சமயங்களில் எவ்வாறு பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் முன்னெச்சரிக்கையாக இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பேரிடரில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்க வேண்டும்,' என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சியின் மூலம் விளக்கினர். நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா, தேசிய பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.