உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடி கிராமங்களில் சில்லிங் மது விற்பனை; கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்

பழங்குடி கிராமங்களில் சில்லிங் மது விற்பனை; கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்

பந்தலுார்;பந்தலுார் அருகே பழங்குடி கிராம மக்களுக்கு 'சில்லிங்' முறையில் விதிகளை மீறி மது விற்பனை நடந்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில் பி.ஆர்.எப்., மற்றும் போத்துக்கொல்லி, மங்கரை பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு. 100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் பணியர் சமுதாய பழங்குடியின இளைஞர்கள் தற்போது கல்வியில் மேம்பட்டு, கல்லுாரி படிப்பு வரை சென்றுள்ளனர். மறுபுறம் பலர் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயன் இல்லாத நிலையில், நாள்தோறும் இவர்களின் வீடுகளில் பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றன.இந்த மக்களின் கிராமங்களை ஒட்டி டாஸ்மாக் மது கடைகள் ஏதும் இல்லாத நிலையில், பி.ஆர்.எப்., பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் உள்ள ஒரு கடையில், கூடுதல் விலைக்கு 'சில்லிங்' மது விற்பனை அதிகரித்து வருகிறது.

கூடுதல் விலைக்கு விற்பனை

மது வகைகளுக்கு கூடுதல் விலை இருப்பினும், தங்கள் கிராமத்தை ஒட்டி மது வகைகள் கிடைப்பதால், அதிகாலை நேரத்திலேயே பல இளைஞர்கள் குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகி வருவது குறித்து, பெற்றோரும் கட்டுப்படுத்த முடியவில்லை.இதுகுறித்து உள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார் கொடுத்தும் இதுவரை பயனில்லை.எப்போதாவது வரும் மதுவிலக்கு பிரிவு போலீசார் பெயருக்கு ஆய்வு செய்துவிட்டு செல்கின்றனர். ஆனால், தொடர்ச்சியாக இங்கு கூடுதல் விலைக்கு மது விற்பனை நடந்து வருகிறது.உள்ளூர் மக்கள் கூறுகையில், 'பழங்குடியின மக்களை பாழ்படுத்தும் சில்லிங் மது விற்பனை செய்யும் கடை வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் மாணவர்கள் போதையில் சிக்காமல் இருக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி