உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / படிக்க போனா இத கேக்குறாங்க... நாங்க எந்த ஜாதி! சான்றிதழை எப்போ தருவீங்க?

படிக்க போனா இத கேக்குறாங்க... நாங்க எந்த ஜாதி! சான்றிதழை எப்போ தருவீங்க?

பந்தலுார்:பந்தலுார் அருகே பல கிராமங்களில், பழங்குடியினர் ஜாதி சான்று கிடைக்காமல், கல்வியை தொடர முடியாமல், அவதிப்பட்டு வருவது குறித்து, அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாயத்தில் சமீப காலமாக கல்வியில் ஆர்வம் செலுத்தும் இளைய தலைமுறையினரால், எதிர்கால சமுதாயம் ஓரளவு கல்வியில் சாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவர்களில் பெரும்பாலான இளையோர், 10ம் வகுப்புடன் தங்கள் கல்வியை நிறுத்தி கொள்கின்றனர். இதனால், வேலை வாய்ப்பு கிடைக்காமல், அன்றாட கூலிகளாக உள்ளனர்.

விண்ணப்பித்தும் நிராகரிப்பு

இவர்களுக்கு கல்வி மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டுமெனில், அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தின் ஜாதி சான்றிதழ் தேவை.தங்களுக்கான ஜாதி சான்றிதழ் கோரி, அவர்கள் சார்ந்துள்ள சமுதாய சங்கத்தின் பரிந்துரை கடிதத்துடன் விண்ணப்பித்தால், ஆர்.டி.ஓ., நேரடியாக ஆய்வு செய்து, ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்.ஆனால், இங்கு வாழும் பெரும்பாலான பழங்குடியின மக்களுக்கு, ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதில், எருமாடு அருகே, கூலால் பழங்குடியின கிராமத்தில், 20க்கும் மேற்பட்டோர் சான்றிதழ் கோரி பலமுறை விண்ணப்பித்தும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

கள ஆய்வு பணியில் சுணக்கம்

மலை மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரின் மேம்பாட்டு திட்டங்களுக்காக பல்வேறு துறை செயல்பட்டு வருகிறது. அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள், கள ஆய்வில் ஆர்வம் காட்டுவதில்லை. அலுவலகத்தில் பணியாற்றுவதுடன் நின்று விடுவதால், இதுபோன்ற கிராமங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத சூழல் தொடர்கிறது.உள்ளூர் மக்கள் கூறுகையில், ''ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் அரசின் சலுகைகளை பெற முடியாமலும் பழங்குடியினர் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற கிராமங்களை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.பழங்குடியினர் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடிகளை கல்வியில் மேம்படுத்த வேண்டுமெனில், அவர்களுக்கான அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். அதில் ஒன்று ஜாதி சான்று. அது கிடைத்தால் மட்டுமே, பள்ளி கல்விக்கு பின், பிற படிப்புகளை தொடர முடியும். கல்வி பயிலாத மக்களுக்கு, ஜாதி சான்றிதழை கிராமங்களில் முகாம் நடத்தி கொடுக்க வேண்டி, அரசு அதிகாரிகள் எங்கள் மக்களை புறக்கணிக்கின்றனர். இதனால், எங்களின் வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்ல முடியாமல், வனப்பகுதிகளில் வறுமையில் தொடர்கிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்தில் மட்டும் இவர்களை பார்க்க முடிகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை