அதிகரிக்கும் வெயிலால் குடைமிளகாய் மகசூல் பாதிப்பு
கூடலுார், ; மசினகுடியில், அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் குடைமிளகாய் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலுார், முதுமலை பகுதிகளில், நடப்பாண்டு பனிப்பொழிவை தொடர்ந்து வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மசினகுடி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் பயிரிட்டுள்ள குடைமிளகாய் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், அதிகம் செலவு செய்து வருவாய் எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'நடப்பாண்டு கோடைக்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குடைமிளகாய் மகசூல் பாதிக்கப்பட்டு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மற்ற விவசாய பயிர்களிலும் மகசூல் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய அரசு நிவாரண உதவி வழங்குவதுடன், கோடையில் வெயிலின் தாக்கத்திலிருந்து காய்கறிகளை பாதுகாக்க, அரசு மானியத்துடன் பசுமை குடில் அமைத்து தர வேண்டும்,' என்றனர்.