பறவை காய்ச்சல் தடுப்பு பணி எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
பந்தலுார்;கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும்நிலையில், தமிழக எல்லைக்குள் பரவாமல் தடுக்கும் பணியில், தமிழக கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக - கேரளா எல்லை பகுதிகளில் உள்ள, சோதனை சாவடிகளில் கால்நடை டாக்டர் மற்றும் உதவியாளர்கள் நியமித்து, கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னர் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது. சரக்கு வாகனங்களில் பதிவு எண் மற்றும் விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. அதில், கேரள மாநிலம்வயநாடு பகுதியில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும்சுல்தான் பத்தேரி -நுால்புழா- கூடலுார் சாலையில், பாட்டவயல் வனத்துறை சோதனை சாவடியில், கால்நடை டாக்டர் நந்தினி தலைமையிலான குழுவினர் முகாமிட்டு கிருமி நாசினி தெளிப்பு மற்றும் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை மற்றும் முத்தங்கா வனப்பகுதியை ஒட்டிய இங்கு இரவு நேரத்தில் யானைகள் தினசரி வந்து செல்வதால், பகல் நேரத்தில் மட்டும் இந்த தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.