குன்னுார் : குன்னுார் நகரமன்ற சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி கமிஷனர் சசிகலா, தலைவர் வாசிம் ராஜா (பொ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வயநாட்டிக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுப்பதுடன், கவுன்சிலர்களின் ஒரு மாத சம்பளம் நிவாரணமாக வழங்க முடிவு செய்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர் ஜாகிர் உசேன் பேசுகையில், ''இயற்கையை சீரழிப்பதால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் போன்று நீலகிரியிலும் பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக இன்றைய (நேற்றைய)'தினமலர்' நாளிதழில் செய்தி வந்துள்ளது. எனவே, இயற்கையை பாதுகாக்கவும், கட்டடங்களை கட்ட வரன்முறை செய்வது அவசியம். கட்டட அனுமதி வழங்கும்போது கட்டாயம் ஒரு வீட்டுக்கு, 10 மரம் நடவு செய்யும் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இயற்கை விவசாயத்தை பாதுகாக்க, திருமண மண்டபங்களிலும், அரசு விழாக்களிலும் பூக்களை பயன்படுத்துவதுடன், பிளாஸ்டிக் மலர்களை முழுமையாக தடை செய்ய வேண்டும்,'' என்றார்.மின் இணைப்புக்கு தடையில்லா சான்றிதழ்கள் வழங்க கவுன்சிலர் சரவணன் கோரிக்கை விடுத்தார். அப்போது, 'ஆற்றோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இது போன்ற சான்றிதழ்கள் வழங்க முடியாது,' என, கமிஷனர் சசிகலா தெரிவித்தார். செயல்படாத பொறியாளர் பிரிவு
கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் எஸ்.ஏ.டி.பி., திட்ட பணிகளில் 'எஸ்டிமேட் அப்டேட்' செய்யாமல் விடப்படுவதாக குற்றம் சாட்டினர். இது குறித்து கமிஷனர் காரணம் கேட்ட போது, பொறியாளர் பிரிவு அதிகாரிகள் பதில் சொல்ல திணறினர். அப்போது, பொறியாளர் பிரிவினருக்கு 'டோஸ்' விட்டு கமிஷனர் பேசுகையில், ''சமவெளியில், 60 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பொறியாளர் உடனடியாக செயல்படுத்தும் நிலையில், 35 லட்சம் ரூபாய் நிதிக்கான திட்டங்களை கூட செயல்படுத்த திணறும் இந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.தொடர்ந்து, கவுன்சிலர்கள் காவேரி, சாந்தி, நாகராஜன், சித்ரா, உமாராணி உட்பட பல கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.