ஊட்டி;ஊட்டியில், 110 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 10 வாகனங்களை மறு ஆய்வுக்கு எடுத்து வர உத்தரவிடப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்த, ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் பள்ளி வாகனங்களில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. ஆவணங்கள் ஆய்வு
'வாகனங்களின் பதிவு சான்று, காப்புசான்று, அனுமதி சீட்டு, ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்க பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, அவசர வழி, தீயணைப்பு கருவி,' உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில், பல அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ''ஊட்டி, குந்தா, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில், 272 பள்ளி வாகனங்கள் உள்ளன. ஏற்கனவே, கோத்தகிரியில், 120 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 10 வாகனங்களின் ஆவணங்கள் சரியாக இல்லாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டு மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. ஊட்டியில் 152 வாகனங்களில், இன்று ( நேற்று) 110 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தியதில், 10 வாகனங்களின் ஆவணங்கள் சரியாக இல்லாத காரணத்தினால் நோட்டீஸ் வழங்கி, மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோ உட்பட பிற வாகனங்களையும் கண்காணித்து அளவுக்கு அதிமகாக ஏற்றி செல்லாமல் இருக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்'' என்றார். தீ ய ணைக்கும் கருவி பயன்படுத்துவது எப்படி?
பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்படும் சமயங்களில் டிரைவர்கள் மேற்கொள்ள வேண்டிய அவசர கால நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் ஹரி ராம கிருஷ்ணன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன் கூறுகையில், ''பள்ளி வாகனங்களில் தீயை அணைக்கும் கருவி, 2 கிலோ வீதம், 2 வைக்கப்பட வேண்டும். அதில், 'மோனோ அம்மோனியம் பாஸ்பேட் ' நிரப்பி இருக்க வேண்டும். இந்த கருவியில் இடப்புறம் சிவப்பு நடுவில் பச்சை, வலப்புறத்தில் சிவப்பு இருக்கும். கருவியின் முள், எப்போதும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். இதை வாகன ஓட்டிகள் அடிக்கடி கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அப்படி பச்சை நிறத்தில் இருந்தால்தான் தீ விபத்து சமயத்தில் 'மோனோ அம்மோனியம் பாஸ்பேட்' அளவு சரியாக இருக்கும் போது தான் தீயை அணைக்க முடியும். வாகனம் சென்று கொண்டிருந்த போது என்ஜின் பகுதியிலிருந்து ஏதாவது வாசனை வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி பேட்டரி ஒயரை 'கட்' செய்து குழந்தைகளை இறக்க வேண்டும். தீயணைக்கும் கருவியில் வழிமுறைகளை சரியான முறையில் கையாள வேண்டும்.'' என்றார்.