சுற்றுலா வழிகாட்டுதலுக்கு கியூ.ஆர்., குறியீடு வரைபடம்
ஊட்டி:நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும், 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அதில், கோடை சீசனான ஏப்ரல், மே மாதத்தில் மட்டும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அதில், 80 சதவீதம் பேர் சொந்த வாகனங்களில் வருகின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பல்வேறு மாற்றங்களை போலீசார் செய்துள்ளனர்.இந்நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணியர் எளிதாக உள்ளூர் சுற்றுலா மையங்களுக்கு செல்லும் வழியை அறிந்து கொள்ளும் வகையில், கியூ.ஆர்., குறியீடுடன் கூடிய வழிகாட்டி வரைபடத்தை, போலீசார் வெளியிட்டுள்ளனர்.நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் நேற்று இதை வெளியிட்டு, சுற்றுலா பயணியருக்கு வரைபடத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.அதில், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான தகவல்கள் உள்ளன.எஸ்.பி., சுந்தர வடிவேல் கூறுகையில், ''நீலகிரி வரும் சுற்றுலா பயணியர், லவ்டேல் சந்திப்பு பகுதியில் இருந்து உள்ளூர் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில், மூன்று வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 30,000 வரைபடங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சீசனுக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, இவை வினியோகிக்கப்படும்,'' என்றார்.
'இ - பாஸ்' குழப்பமில்லை
நீலகிரி வரும் சுற்றுலா பயணியர் இரண்டு நாட்களாக இ - பாஸ் பதிவு செய்து வருகின்றனர். இதில், 'பாஸ்' ரத்து செய்யும் ஆப்ஷன் இல்லை. எனினும், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். அதேபோல, சுற்றுலா வாகனங்கள் வருவதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை என்பதை, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்நிலையில், இ - பாஸ் நடைமுறைக்கு வந்த பின்பு, ஊட்டிக்கு நாளொன்றுக்கு, 12,000 சுற்றுலா பயணியர் மட்டும் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது குறைவாகும். இம்முறை, 10 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கும் என்பதால், அந்த நாட்களிலும் குறைந்த அளவிலான கூட்டம் வருவதற்கு வாய்ப்புள்ளது.