| ADDED : ஏப் 20, 2024 12:31 AM
குன்னுார்;குன்னுார் கேத்தி தொட்டணி கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.குன்னுார் தொட்டணி கிராமத்தில் நேற்று ஓட்டளிக்க சென்ற கிராம மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக கூறினர். இதனால் மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, அங்கு வந்த குன்னுார் தாசில்தார் கனி சுந்தரம் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு, குறிப்பிட்ட பூத்களின் தேர்தலை வேறு தேதிக்கு மாற்றி தர கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'ஆன்லைன் மூலம் மீண்டும் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தேர்தலில் ஓட்டு அளிக்க முடியும்,' என, அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து மக்கள் ஓட்டளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தாசில்தார் கனி சுந்தரம் கூறுகையில், ''இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்ய செல்லும்போது வீடுகள் பூட்டியும், மாணவ, மாணவியர் வெளியூர்களில் படித்தும் வருகின்றனர். 28 பெயர்கள் விடுபட்டதாக கூறிய நிலையில் ஆய்வு செய்ததில் நான்கு பெயர்கள் இருந்ததால் அவர்கள் ஓட்டளித்தனர். ஆன்லைனில் பதிவு செய்த அடுத்த தேர்தலில் ஓட்டளிக்கலாம்,''என்றார்
பெயர் 'டிலிட்'
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மற்றும் அவரது மனைவி திலகாம்பாள் மகன், மகளுடன் நேற்று ஓட்டு மையத்திற்கு ஓட்டளிக்க சென்றனர். அதில், திலகாம்பாள் பெயர் டெலிட் செய்திருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.குணசேகரன் கூறுகையில்,''கடந்த முறை ஓட்டு இருந்த நிலையில் இந்த முறை திடீரென டெலிட் செய்து ஓட்டு அளிக்க முடியாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.